எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

24. நடந்தாய் வாழி, காவேரி!

ஆகஸ்ட் 18, 2006

காவேரி நதியைப் பத்தி நான் சொல்லி யாரும் தெரிஞ்சுக்கணும்னு இல்லை. ஆனால் நான் முதலில் பார்த்த காவேரிக்கும், இப்போது பார்க்கிற காவேரிக்கும் உள்ள வித்தியாசங்களைச் சொல்கிறேன். நாங்க பங்களூரில் இருந்து மைசூர் போனது பஸ்ஸில் தான். கர்நாடக அரசு பஸ் என்றாலும் VOLVO பஸ் என்பதாலும் முற்றிலும் குளிரூட்டப் பட்டது என்பதாலும் பஸ்ஸில் போவது போலவே இல்லை. நல்ல தரமான ரோடும் கூட. பஸ்ஸில் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டு டிரைவர் பக்கத்தில் பொத்தான் உள்ளது. நடத்துனர், ஓட்டுநர் எல்லாரும் ஒருவரே. நல்ல திறமையான நிர்வாகம். கட்டாயம் பாராட்டுக்குரியது.

போகும் வழியில் சன்னப்பட்டினம் தாண்டியதுமே காவேரியின் சிறப்புக்கள் தெரிய ஆரம்பித்தன. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காவேரியைக் கடக்கும்போது பார்த்தேன். தலைக்காவேரியிலிருந்து தவழ்ந்து வரும் காவேரி, நடக்க ஆரம்பித்த குழந்தை போல வேகமாக வருகிறாள். செல்லும் வழி எங்கும் பசுமை, குளிர்ச்சி. மைசூரில் இருந்து கிளம்பி திருச்சி வரும் வழியில் இரவாகி விட்டதால் நடுவில் கடந்த காவேரியைப் பார்க்க முடியவில்லை. திருச்சியில் காலை எழுந்து குணசீலம் போகும் வழியில் முக்கொம்பில் ஆட்டோ பாதை மாறியது. ஆகவே முக்கொம்பை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டே போனோம். அகண்டு விரிந்த தன் கரங்களால் ஊருக்குள் வர முடியுமா என்பது போல வேகம் எடுத்துப் போக வேண்டியவள், இப்போது அடக்க ஒடுக்கமாக இரு கரையும் தொட்டுக் கொண்டு நிதானமாக ஓடுகிறாள்.முக்கொம்பிலேதான் கொள்ளிடம் பிரிகிறது. அங்கே தன் ஆற்றலில் ஒரு சிறிய பங்கு தான் கொடுத்திருக்கிறாள். முதன் முதல் திருமணம் ஆகிக் கணவன் வீடு வரும் மனைவி போல் இல்லாமல் வெகு நாட்கள் கணவனைப் பிரிந்திருந்து விட்டு இப்போது பயமும், தயக்கமுமாகக் கணவன் தன்னை ஏற்றுக் கொள்வானா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் பெண்ணைப் போல மிக அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் செல்லும் வழியெங்கும் தன் வளத்தைக் காட்டத் தவறவில்லை. கடமையில் சிறிதும் தவறாத மனைவியைப் போல அங்கங்கே பாசனம் செய்திருந்த நிலங்களைச் செழிப்புறச் செய்திருந்தாள்.

பச்சையில் தான் எத்தனை வகை? நிலத்தில் விதை விதைத்தவுடன் முளை கிளம்பியதும் தெரிகிற மஞ்சள் கலந்த பச்சை, நாற்று சிறிது வளர்ந்ததும் தெரிகிற கிளிப்பச்சை, நாற்று பிடுங்கி நடுகிற பக்குவத்திற்கு வந்தது தெரிகிற கரும்பச்சை, நட்ட நாற்றுக்கள் பயிராக வளர்ந்த இடங்களில் தெரிகிற இலைப்பச்சை என்றும் எங்கும் எதிலும் பச்சை மயம். கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாகக் ,காற்றும் குளிர்ந்து வீசியது. நாற்றுக்கள் பிடுங்கி அங்கங்கே மாலை போலக் கட்டப்பட்டிருகின்றன. பார்க்கவே கண்ணுக்கு ரம்மியமான காட்சி. முன்பெல்லாம் என் புக்ககமான கிராமத்திற்குப் போகும் வழியில் இம்மாதிரி நிறைய நாற்று மாலையைக் காணலாம். சிலர் வாய்க்காலில் கூட விடுவார்கள். நாற்று மிதந்து போகும் காட்சி கண்ணுக்கு அழகாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கும். இப்போது என்னதான் தண்ணீர் இருந்தாலும் இம்மாதிரி அதிகம் பார்க்க முடியவில்லை. சில நிலங்கள் தரிசாகவும் கிடக்கின்றன. உழுது போட்டிருக்கும் நிலங்களின் பழுப்பு நிறமும், தண்ணீர் கட்டி வைத்துள்ள நிலங்களின் நிறமும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இன்பம் அளிக்கிறது.தன் புகுந்த வீட்டுக்கு எவ்விதக் குறையும் அளிக்க விரும்பாத ஒரு பெண்தான் அவள் என்று புரிகிறது. ஆனால் நாம்? அவள் வரும் வழியை எப்படி வைத்திருக்கிறோம்?

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை ஓரளவு நல்ல மாதிரியாகப் பார்க்க முடிகிறது. ஆனால் கும்பகோணத்திலும், மாயவரத்திலும் மிகக் குறைந்த அளவிலேயே பாசனம் நடைபெறுகிறது. அதுவும் கும்பகோணத்தில் இருந்து ஸ்வாமிமலை போகும் வழி எங்கும் முன்னர் பார்த்த வயல்கள் எங்கே? தெரியவில்லை. எல்லாம் வீடு மயம். மடத்துத் தெரு காவேரிப் படித்துறையில் காவேரி சற்று வேகமாகப் போகிறாள். திருவலஞ்சுழியில் அவளில் இருந்து பிரிந்து வந்த அரசலாறோ பார்த்தாலே கண்ணீர் வரும் நிலைமையில் இருக்கிறது. அரசலாறு ஒரு அமைதியான நதி. காவேரியைப் போல ஆரவாரம் இருக்காது.

கும்பகோணத்தில் இருந்து எங்கள் ஊர் செல்லும் சாலையில் சாக்கோட்டையில் ஆரம்பித்து சாலையை விரிவாக்கம் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு பழைய மரங்கள் எல்லாம் வேரோடு வெட்டிச் சாய்க்கப் படுகிறது. அந்தப் பக்கம் போனாலே குளிர்ச்சியாக இருக்கும். இப்போது அரசலாறு இரு கையும் இழந்த பெண்ணைப் போல ஒரு மெளன சாட்சியாக வாயைத் திறக்காமல் தயங்கித் தயங்கிப் போய்க் கொண்டிருக்கிறாள். அவள் மேனி எல்லாம் ஆகாயத் தாமரையும், பார்த்தீனியமும். தன் உடலில் இத்தனை வியாதி எப்படி வந்தது என்பதே புரியாமல் திகைப்புடன் தனக்கு என்ன ஆச்சு என்று பார்த்துக் கொண்டே போகிறாள். இத்தனை நாள் ஊர்ப்பக்கம் போகும் போது எல்லாம் தண்ணீர் வரவில்லை அதான் இப்படி என்று சொன்னார்கள். இப்போது நாட்டான் வாய்க்காலில் இருந்து ஆரம்பித்துக் காவேரியில் இருந்து பிரியும் எல்லாக் கிளை நதிகளிலும் தண்ணீர் போய்க் கொண்டிருந்தும் அரசலாற்றின் துயரம் தீரவே இல்லை. ரொம்ப மன வருத்தத்துடன் ஓடுகிறாள். இங்கே எல்லாம் பாசனமும் அவ்வளவாக நடைபெறவில்லை. எல்லாரும் பணப்பயிரான பாமாயில் கன்றுகள், கரும்பு என்று ஏதேதோ போடுகிறார்கள். மொத்தத்தில் இத்தனை நாளாக வறண்ட ஊரைப் பார்த்து வந்த எங்களுக்கு இப்போது தண்ணீர் வந்தும் ஏமாற்றமாக இருந்தது.

நடந்தாய் வாழி காவேரி!
"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி காவேரி!

கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி! "

No comments: