எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, October 29, 2006

44.ஓம் நமச்சிவாயா-15

சாகாவில் இருந்து நாங்கள் "பர்யாங்க்" என்னும் ஒரு இடத்தில் போய்த் தங்கினோம். வழக்கம் போல வழியில் சில வண்டிகள் நின்று போய்த் தொந்திரவு கொடுத்தது. எங்கள் டிரைவர் உடனே போய் உதவுவார். பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டாலும் இவர் எல்லாருக்கும் உதவுவதில் முன்னால் நிற்பார். எல்லா வண்டிகளும் சரியாகக் கிளம்புகிறதா என்று பார்த்துவிட்டுக் கிளம்பி அந்த மலைப்பாதையில் வண்டியோடு உண்மையிலேயே குதித்துக் கீழே இறங்கி எங்கள் வயிற்றைக் கலக்கிவிட்டு முன்னால் போய் நின்று நான் ஜெயிச்சுட்டேன் என்பது போல கட்டை விரலை உயர்த்திக் காட்டிச் சிரிப்பார் நாங்கள் அவரை ஜாக்கி சான் என்றும் (பார்க்க அந்த ஜாடையில் இருப்பார்) திபெத்திய ரஜினி என்றும் குறிப்பிடுவோம். எப்பவும் அவர் வழி தனி வழிதான். அதனால் அப்படி. வழியில் சீன RTO அலுவலகத்தில் மானசரோவர் நெருங்கும் சமயம் என்பதால் எல்லா வண்டி ஓட்டிகளின் லைசென்ஸ், அடையாள அட்டை முதலியனவற்றைப் பரிசோதித்து அனுப்புகிறார்கள். அநேகமாய் இந்தியாவிலேயே தமிழ் நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், வாடகை வண்டி ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை இருக்கிறது. மேலும் லைசென்ஸ் எதுவரை இருக்கிறது, அடுத்து எப்போது புதுப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் புகைப்படப் பதிவு மூலம் வண்டியின் உள்ளேயே ஒட்டி விடுகிறார்கள். தமிழ்நாட்டில் இம்முறை எப்போ வருமோ தெரியலை..

பர்யாங்கில் குறிப்பிடும்படி எதுவும் நடக்கவில்லை. .குளிர் அதிகம் என்பது தவிர. திருமதி நர்மதாவின் உடல் நிலை அப்படியே இருந்தது. அதோடு அவர் மறுநாள் மானசரோவர் பிரயாணத்திற்கும் தயார் ஆனார். பர்யாங்கை விட மானசரோவர் சில அடிகள் மட்டும் குறைந்த உயரம் என்று சிலரும் இல்லை மானசரோவர்தான் உயரம் என்று சிலரும் சொல்கிறார்கள். கடல் மட்டத்திற்கு மேல் 14,950 அடி உயரத்தில் உள்ளது. உலகில் எங்கும் இத்தகைய அபூர்வமான ஏரி இத்தனை உயரத்தில் கிடையாது. இனி மானசரோவர் பிறந்த விதம் பற்றிய ஒரு நிகழ்வு.
**********************

தட்சனின் மகளான தாட்சாயணி தன்னைத் தானே மாய்த்துக் கொண்டதும், தன் மனைவியான சக்தி இல்லாமல் இயங்க முடியாத சர்வேஸ்வரன் அவள் உடலைத் தோள் மேல் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடியதும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அப்போது அவர் கோபத்தைத் தணிக்க வேண்டியும், அன்னையின் சக்தி பாரதமெங்கும் பரவி அவள் அருளாட்சி எங்கும் திகழ வேண்டியும், மஹாவிஷ்ணுவானவர் தன் சுதர்ஸன சக்கரத்தால் அன்னையின் உடலைத் துண்டு துண்டுகளாக்குகிறார். ஒவ்வொரு துண்டும் வீழ்ந்த இடம் ஒரு "மஹா சக்தி பீடம்" ஆகிறது. அப்படி அன்னையின் வலது முன் கை வீழ்ந்த இடமே மானசரோவர் ஆகும். அன்னையின் வலது முன்கை வீழ்ந்த போது படுவேகமாக ஆகாயத்தில் இருந்து பாய்ந்து வந்து விழுந்தது. அப்போது இமயமே அதிர்ந்தது. அண்டசராசரங்கள் கிடுகிடுத்தன. அந்தப் பிரதேசம் தாழ்வடைந்தது. மேலும் வலது முன்கை வீழ்ந்த இடம் ஒரு அகண்ட பெரிய பள்ளம் ஆனது. புல், பூண்டு, நீர் என ஒன்றுமே இல்லாத அந்தப் பிரதேசத்தில் அந்தப் பள்ளம் வேதகாலத்தில் மஹாசக்தி பீடமாக வணங்கப் பட்டிருக்கிறது. பற்பல யுகங்களுக்குப் பிறகு பிரம்மாவின் நல்வரவால் அந்தப் பிரதேசத்தில் நீர் நிரம்பி இருக்கிறது. இதுவே பின்னால் மானசரோவர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்திபீடத்தை அலங்கரிக்கும் தேவி "தாட்சாயணி"யே ஆவாள். இப்போது மானசரோவரின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளும் முன் அது வந்த விதம் பற்றி அறிவோமா?

அத்திரி மஹரிஷியின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்த மஹாவிஷ்ணு அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க ஸ்ரீமந்நாராயணனின் அம்சத்தோடு ஒரு பிள்ளை கேட்கிறார் மஹரிஷி. தன் அம்சத்தோடு ஈசன், பிரம்மாவின் அம்சங்களையும் கலந்து ஒரு பிள்ளையைத் தானே சிருஷ்டி செய்து அத்திரி மஹரிஷியிடம் அளிக்கிறார். அந்தக் குழந்தையை முறைப்படி ரிஷிக்குத் தத்தம் செய்கிறார். (இதுவே அனசூயையின் கற்பைச் சோதிக்க வந்த மும்மூர்த்திகளையும் குழந்தை வடிவில் அனசூயை மாற்றியதாகவும், மும்மூர்த்திகள் திரும்பிச் செல்லும்போது தங்கள் அம்சமான அந்தக் குழந்தையை விட்டுச் சென்றதாகவும், அந்தக் குழந்தையே "தத்தாத்ரேயர்" எனவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.) ஆனால் இது இப்போது நான் எழுதுவது ஸ்காந்த புராணத்தில் இருப்பதாகவும் அதில் "மானஸ்காந்தம்" என்ற பகுதியில் இது வருவதாகவும் புராணங்களைப் பற்றிய தொகுப்பில் படித்திருக்கிறேன். இதில் கைதேர்ந்த "குமரனோ, சிவமுருகனோ அல்லது (ரவி)கண்ணபிரானோ" தான் இதை விளக்க வேண்டும். மஹாவிஷ்ணு தத்தம் செய்ததால் தத்தாத்ரேயர் என்ற பெயர் பெற்ற அந்தக் குழந்தை சதுர்வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களயும் நன்கு கற்றுப் பெரும் முனிவராக விளங்கினார். ஒரு முறை தத்தாத்ரேயர் இமயத்தைக் கடந்து செல்ல முயன்றபோது இமவான் அவர் முன் தோன்றி மலையைக் கடந்து ஏன் செல்ல வேண்டும் எனக் கேட்க, இமயத்தை விட பிரம்மாண்டத்திலும், உயரத்திலும் மற்ற எல்லாவற்றிலும் குறைவான மந்தரம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம் போன்ற மலைகளை நாடிப் பக்தர்கள் கூட்டம் செல்வதாகவும் அதன் காரணம் தெய்வங்கள் உறையும் இடமாக அது இருப்பதால்தான் எனவும் கூறுகிறார். மேலும் இமவானைப் பார்த்து உன்னிடம் மறைந்துள்ள அரிய தலங்களை வெளி உலகுக்குக் காட்டு. உன் பொக்கிஷங்கள் இந்தப் பூலோக மக்களுக்கும் பயன்படட்டும். அந்தத் தெய்வீக ஸ்தலங்களுக்கு முதலில் என்னை அழைத்துச் செல்வாயாக என வேண்ட இமவானும் அவர் வேண்டுகோளை ஏற்றுத் திருக்கைலை அழைத்துச் சென்று கைலைநாதனைத் தரிசனம் செய்விக்கிறான். பின் இருவரும் மானசரோவர் ஏரிக்கரைக்கு வந்து அங்கு நீராடுகிறார்கள். அப்போது இந்த ஏரி அங்கேவந்த காரணத்தை இமவான் தத்தாத்ரேயரிடம் கூற ஆரம்பிக்கிறான்.
(தொடரும்.)

No comments: