எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, December 19, 2006

22. ஓம் நமச்சிவாயா

டாக்டர் நர்மதாவின் கணவரும் திரும்பி விட்டார். மனைவியின் உடல் நிலை கருதியோ என்னவோ அவரும் திரும்பி விட்டார். அவர்தான் மோட்டார் பைக்கில் எங்களைக் கடந்தார் என்று தெரிந்து கொண்டோம். திரு. சிவநாராயணனும் அவரும் மோட்டார் பைக்கில் வந்திருக்கிறார்கள். அதற்கு 500 யுவான் ஒருத்தருக்குக் கொடுத்திருக்கிறார்கள். கேம்பில் போய்ச் செய்தி சொல்லவும் கிட்டத்தட்ட 300 யுவான் வரை கொடுக்க வேண்டுமாம். நல்லவேளையாக எங்களுக்கு யாரும் போய்ச் செய்தி சொல்ல அனுப்பவில்லை என்று சந்தோஷப்பட்டோம். 500 யுவான் என்பது கிட்டத்தட்ட ரூ.3,500/-ஆகிறது. நாங்கள் சென்ற சமயம் ஒரு யுவானுக்கு இந்திய ரூபாய் 6-60 மதிப்பு. மறுநாள் நாங்கள் எல்லாரும் பரிக்ரமாவில் இருந்து திரும்பி வருபவர்களை எதிர்பார்த்து இருந்தோம். அவர்கள் வருவதை வரவேற்க இங்கிருந்து எல்லா வண்டிகளும் கிளம்பிப் போனது. திருமதி மீராவும் வருபவர்களை வரவேற்கப் போனார். இங்கே நாங்கள் தங்கி இருந்த அதே கேம்பில் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட குழு ஒன்றும் வந்து திரும்பிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 25, 30 பேர் இருக்கும். சமையல்காரர், மருத்துவர், மருத்துவ உபகரணங்கள் என்று எல்லாவிதமான ஏற்பாட்டோடும் வந்திருந்தார்கள். இங்கே உள்ள திபெத்தியர் கூட்டம் கூட்டமாக வந்து சீனப் பொருட்களையும், மற்றும் பவளம், முத்து, கிரிஸ்டல் போன்ற மாலைகள், மணிகள், விக்ரஹங்கள் என்று விற்க வருகிறார்கள். என்னைப் பொறுத்த வரை நான் எப்பவுமே ரொம்ப மோசமான shopper. எல்லாரும் பொருட்கள் வாங்க நான் வேடிக்கை மட்டும் பாரத்துக் கொண்டிருந்தேன். நான் போன இடங்களில் இருந்து எல்லாம் பொருட்கள் வாங்கி வந்து கொண்டிருந்தால் வீட்டில் இடம் இருக்காது. அதை வைத்துப் பராமரிக்கவும் போவதில்லை. ஆகையால் நான் எதுவுமே வாங்கவில்லை. என் கணவருக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது. சிலபொருட்களைப் பார்த்தார். விலை சரிப்பட்டு வரவில்லை. நாங்கள் கொண்டு வந்திருந்த பணத்துக்குள் வரவில்லை. ட்ராவல்ஸ்காரர்கள் பணம் போதவில்லை என்றால் உதவி செய்கிறார்கள். ஆனால் அது அவசரம் என்றால் மட்டுமே பெறவேண்டும் என்று எங்கள் கொள்கை, ஆதலால் எதுவுமே வாங்காமல் இருந்து விட்டோம்.

சற்று நேரத்திற்கெல்லாம் பரிக்ரமா போனவர்கள் எல்லாம் திரும்ப ஆரம்பித்தார்கள். எல்லாரும் பார்க்கவே எதோ ரொம்பவே கஷ்டப்பட்ட மாதிரியும், ஏதோ சொல்ல முடியாத துக்கத்தில் இருப்பவர்கள் போலவும் தெரிந்தார்கள். என்னவென்று புரியவில்லை. அப்போது மத்தியானச் சாப்பாட்டு நேரம் ஆகிவிட்டதால் எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்கவும், சிலர் எங்கள் அறைக்கு வந்து என் உடல் நலத்தை விசாரித்து விட்டு அங்கேயே உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். ஏதோ சொல்ல நினைத்து சொல்லலாமா வேண்டாமா எனத் தயங்குவது போல் இருந்தது. எனக்குள்ளும் சொல்ல முடியாத அளவு ஏதோ சங்கடமாய் இருந்தது. அப்போது திருமதி ராமச்சந்திரன் அங்கே வந்தவர் என்னைப் பார்த்துவிட்டு உடனேயே கண்ணில் நீர் வர ஆரம்பித்தது. என்னவென்று கேட்டால் பரிக்ரமாவில் 2-வது நாள் ரொம்பவே கஷ்டப்பட்டதாகவும், திடீர் என மழை, திடீர் எனக்காற்று, திடீர் எனப் பனிமழை என்று மாறி மாறி வந்ததாயும் நடக்கவே முடியாமல் ரொம்ப உயரத்தில் போகும்போது அதாவது அங்கே "டோல்மா பாஸ்" என்னும் இடத்தில் மூச்சு விடப் பிராணவாயு போதாத இடம். அங்கே high altitude cross in the world. ஆகவே அங்கே கடக்கும்போது ஐந்து நிமிஷத்திற்குள் கடக்கவேண்டும். இல்லாவிட்டால் ரொம்பக் கஷ்டமாகி விடும். அப்போது அவரால் முடியவில்லை என்றும் வீட்டில் விட்டு வந்திருந்த குழந்தைகள் நினைவு வந்து ரொம்பவே அழுது விட்டதாகவும் கூறினார். கீழே இறங்கும்போதும் செங்குத்தாக இறங்க வேண்டி இருந்ததால் இறங்கவே முடியவில்லை என்றும் அவருடைய உதவி ஆள் கிட்டத்தட்ட அவரை இழுத்துக் கொண்டு போனார் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறினார்: டோல்மா பாஸைக் கடக்கும்போது ஸ்ரீலட்சுமிக்கு உடனடியாய்க் கடக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், உடனேயே அங்கே சற்றுக் கீழே வந்து அவசர டெண்ட் போட்டு அவருக்கு ஆக்ஸிஜன் கொடுத்து அங்கேயே வைத்திருந்தாகவும் சொன்னார். அவரால் மேற்கொண்டு 7 கி.மீ. கீழே இறங்கும் அளவு நடக்க முடியாது என்பதால் அவரை அங்கே தங்க வைத்து துணைக்கு 2 ஆளும் இருந்திருக்கிறார்கள். அவரால் சாப்பாடும் சாப்பிட முடியாமல் போய் விட்டது. அன்று பூராவும் கஷ்டப்பட்டு ராத்திரி கொஞ்சம் பரவாயில்லை, காலையில் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். திடீரென இரவு 2 அல்லது 3 மணி அளவில் அவர் உடல் நிலை ரொம்ப மோசமடைந்து அவர் ஆவி பிரிந்தது." இதைச் சொல்லி விட்டு திருமதி ராமச்சந்திரன் ரொம்பவே அழ ஆரம்பித்தார். எங்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. கைலையில் வந்து இறப்பது என்பது அவருக்குக் கொடுத்து வைத்திருக்கிறது என்று சமாதானப் படுத்திக் கொள்ளப் பார்த்தாலும் எங்களால் முடியவில்லை. அவரோட பாட்டும், பேச்சும் எங்கள் மனதை விட்டுப் போகவில்லை. வழியில் எவ்வளவு குறிப்புக்கள் எடுத்துக் கொண்டு வந்தார்? எவ்வளவு உற்சாகமாய் இருந்தார்? நாங்கள் சிலபேர் எதிர்பாராமல் பிரயாணம் மேற்கொண்டவர்கள். ஆனால் அவர் திட்டம் போட்டு நல்ல முன்னேற்பாடுகள் செய்து கொண்டு, "ட்ரெட் மில்" பயிற்சியிலிருந்து எல்லாம் மேற்கொண்டு தயாராகி வந்தார். இதைத் தான் விதி என்று சொல்வதா? புரியவில்லை. திருமதி தாரகராமனும் ரொம்பவே முடியாமல் ஆளே பாதியாகிச் சுருங்கி விட்டிருந்தார். அவரும் குதிரையில் இருந்து விழுந்து விட்டதாயும், அவருக்கும் ஆக்ஸிஜன் கொடுத்ததாயும், அவரால் நடக்க முடியாமல் போனதால் அவரோட குதிரைக்காரரும், உதவி ஆளும் அவரைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டதாயும் தெரிவித்தார்கள். எல்லாரும் ஒரு மனதாய்ச் சொன்னது, "நல்லவேளை, நீங்கள் வரவில்லை, வந்தால் நீங்களும் கஷ்டப்பட்டிருப்பீர்கள்" என்பது தான். எல்லாரும் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தோம். இதே யாத்திரைக் குழுவின் முதல் முதல் மே மாதம் வந்த குழுவிலும் இதே மாதிரி ஒரு பெண்மணி இறந்து விட்டதாயும் சொல்லிக் கொண்டார்கள். ஒருவேளை உயிர் காக்கும் மருந்துகளும், தேர்ந்த மருத்துவரும் இருந்திருந்தால் ஸ்ரீலட்சுமியைக் காப்பாற்றி இருக்கலாமோ என்னவோ?

அப்போது திரு கிருஷ்ணா வந்து எங்களை எல்லாம்,. "அஷ்டபத்" போகத் தயார் ஆகச் சொன்னார். எட்டு மலைகளுக்கிடையில் கைலையின் தரிசனம் மிக அருகில் கிடைக்கும். எதிரே நந்தி மலையும் இருக்கும். அதற்குப் போவதற்கு இங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் போய் அங்கிருந்து மலைகளின் உச்சியில் போய்த் தரிசிக்க வேண்டும். மலைப்பாதை ரொம்ப உயரம் என்பதால் நடக்கவேண்டாம் என்றும் இப்போது வண்டிகள் போகிறது, அதிலேயே போகலாம் என்றும் சொன்னார். 2004 வரை நடந்துதான் போய்ப் பார்த்திருக்கிறார்கள். "அஷ்டபத்தில்" நாங்கள் யாத்திரை முடிந்ததற்குப் பூஜையும், விநாயகருக்கு நன்றி தெரிவித்துப் பூஜையும் செய்வதாய் இருந்தது. தற்சமயம் இருந்த சூழ்நிலையால் அவை நிறுத்தி வைக்கப்பட்டது. ரொம்பவே வேதனையோடு எல்லாரும் "அஷ்ட பத்" தரிசனத்திற்குக் கிளம்பினோம். அங்கிருந்து திரும்பி இந்த கேம்ப் வர வேண்டாம் என்றும், மானசரோவரின் மற்றொரு கரையில் இரவு தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாயும், நேரே அங்கே போகவேண்டும் எனவும் திரு கிருஷ்ணா கூறினார். அவரும், திரு மனோஹரனும், எங்களில் ஒருவரான வரதராஜன் துணையுடன், இன்னும் எகோ ட்ராவல்ஸைச் சேர்ந்த 2 பேரும், ஸ்ரீலட்சுமியுடன் வந்தவர்களுடன் திருமதி ஸ்ரீலட்சுமியின் உடலை எடுத்துக் கொண்டு மலை இறங்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டுப் பின் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்வதாய்ச் சொன்னார். நாங்கள் கிளம்பினோம்.

2 comments:

EarthlyTraveler said...

எத்தனை எத்தனை சிரமங்கள்?உங்கள் யாத்திரை அநுபவங்கள் Amazing.உன் வாழ்க்கையின் கடிவாளம் உன் கையில் இல்லை,என்ன நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதி விட்ட ஒன்று என அநுபவப்பூர்வமாக காட்டுவதாகத் தோன்றுகிறது உங்கள் பிரயாணம்.Thanks a lot for sharing your experiences with us.--SKM

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆரம்பத்தையும் முடிவையும் நான் பார்த்துக் கொள்கிறேன் முடிந்தால் இடைப்பட்ட வாழ்வை நீ நன்றாக வாழ முயற்சி செய் என்பதுதான் கடவுளின் கட்டளை