எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, March 15, 2008

சிதம்பர ரகசியம் -ஆனித் திருமஞ்சனம்!



ஆதிரையைத் தவிர நடராஜர் வீதி உலா தேரில் வரும் இன்னொரு நிகழ்ச்சி "ஆனித் திருமஞ்சனம்" ஆகும். இது ஒவ்வொரு வருஷத்திலும் தமிழ் மாதம் ஆன ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடை பெறுகிறது. உத்தர பால்குனி என்றே தீட்சிதர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். நடராஜருக்கு அப்போது அபிஷேகம் நடைபெறுகிறது. ஆங்கில மாதம் ஆன ஜூன் நடுவில் இருந்து ஜூலை நடுவரை உள்ள ஒரு நாளில் உத்திர நட்சத்திரம் வரும்போது இந்தத் திருவிழா நடைபெறும். கோடைக் காலத்தின் நடுவே நடைபெறும் இந்த உற்சவமும், வானமும், நட்சத்திரங்களும் சார்ந்தே இருக்கிறது. ஆகாயத் தலம் ஆன சிதம்பரத்தின் அனைத்து நிகழ்வுகளுமே ஆகாயம் சார்ந்து இருப்பதில் வியப்பு என்ன?

இந்த உத்திர நட்சத்திரம் "துருவ" நட்சத்திரம் என்று இந்தியர்களாலும், "pole star" என மற்றவர்களாலும் குறிப்பிடப்படும் நட்சத்திரத்துக்குச் சமானம் என்று சிலப் பழைய நூல்கள் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றார்கள். ஆனிமாதம் உத்திர நட்சத்திர நன்னாளில், ஆகாயத்தின் வடதிசையில், இந்தத் துருவ நட்சத்திரம் என்றழைக்கப் படும் நட்சத்திரம், தன் நட்சத்திரக் குடும்பத்து மற்ற நட்சத்திரங்களுடன், "ராஜ சபை" என அழைக்கப் படும், ஆயிரங்கால் மண்டபத்திற்கு மேல் தெரிவதாயும் சொல்லுகிறார்கள். இதைத் தவிர, மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்திலும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்திலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில் தை மாதப் பூச நட்சத்திரத்தில் வரும் உற்சவம் மிக முக்கியமாய்க் கருதப் படுகிறது. ஆடல்வல்லான் தன் ஆனந்தத் தாண்டவத்தைச் சித் சபையில் இந்த குரு பூசத்தில் நடத்தியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த குரு பூசம் என்பது 5 வருஷங் (அல்லது அதற்கு மேலும் சில சமயம் ஆகிறது,)களுக்கு ஒருமுறை,மட்டுமே வரும் இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருக்கும் இறைவன் தன் நாட்டியத்தைக் காட்டி முக்தி கொடுத்ததாய்க் கூறப்படுகிறது. முதன் முதல் தில்லைப் பதியில் "கனகசபை" அமைத்து இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடியதும் தைப்பூச நன்னாளில் தான் என்று சொல்லப் படுகிறது. சிவனுக்கே உரிய "சூல விரதம்" அன்று சிறப்பித்துச் சொல்லப் பட்டாலும், அது தற்சமயம் அவர்தம் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவனின் அம்சம் ஆன சுப்ரமணியருக்கு உரிய நாளாக மாறி இருக்கிறது. அன்று இறைஅவனுக்கு அன்னப் பாவாடை சார்த்திப் பின்னர் அது பக்தர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப் படும்.

இனி வரும் நாட்களில், சில சரித்திரச் சான்றுகளைப் பார்க்கலாம்.

2 comments:

திவாண்ணா said...

//குரு பூசத்தில்//
தைபூசமும் வியாழக்கிழமையும் ஒன்றாக வர வேண்டுமா?

sury siva said...

பினாங்கில் நடக்கும் தைப்பூசத்திருவிழாவினைக் கண்டு ரசிக்க‌
இங்கே செல்லுங்கள்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://www.pbase.com/quahyc/thaipusam_2008