எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, March 28, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்.

சங்காசுரனைக் கொன்று பாஞ்சஜன்யத்தைப் பெற்ற இடமான இந்த பேட் துவாரகாவில் தான் குசேலரும் கிருஷ்ணரை வந்து தரிசித்து ஸ்ரீயின் அருளைப் பெற்றதாயும் சொல்கின்றனர். மேலும் இன்னொரு அதிசயம் என்னவெனில் இங்கே அருந்தும் நீரும் சுவையாகவே இருக்கின்றது என்பது ஒரு அதிசயமே. கோமதி நதி இங்கேதான் கடலில் கலக்கின்றது என்றும் சொல்கின்றனர். ஆனாலும் நீர் சுவையாய் இருப்பது அதிசயமே. துவாரகை முக்கிய நகரத்தில் நீர் அருந்தவே முடியாது. ஆனால் கடலுக்குள் இருக்கும் சிறிய தீவான இங்கே நீர் அருந்தும்படி இருப்பது அதிசயமே! பேட் துவாரகாவுக்குப் படகில் ஏறும்போதும், பேட் துவாரகாவில் படகில் இருந்து இறங்கும் இடத்திலும் சரி, வரிசையாகப் பால், தயிர் விற்பனை நடக்கும். இதுபற்றி ஏற்கெனவே எழுதிட்டேன் என நினைக்கிறேன். பாலும், தயிரும், வெண்ணெயும் உண்மையாகவே ஆறாக ஓடுமிடமாய் இருக்கிறது.


ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமியான மதுராவிலும், கோகுலம், பிருந்தாவனம் போன்ற இடங்களிலும் இவ்வாறே நல்ல பசும்பால், தயிர், வெண்ணெய், திரட்டுப்பால், மற்றும் பசும்பாலில் செய்யப் பட்ட இனிப்பு வகைகள் கிடைக்கும். குஜராத்தின் துவாரகையில் உள்ள பசுக்கள் எல்லாமும் மதுராவை விட்டு யாதவர்கள் வெளியேறும்போது கொண்டுவந்தவை எனவும் சொல்கின்றனர். பொதுவாகவே பசுக்களை யாரும் துன்புறுத்துவதில்லை எனினும், இங்கே கோயில் பிரஹாரங்களிலும் ரொம்பவே ஸ்வாதீனமாய்ப் பசுக்கள் உலாவிக் கொண்டிருக்கிறதைக் காணமுடியும். துவாரகை முக்கியக் கோயில் கட்டிப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே இது கட்டப் பட்டிருக்கவேண்டும். இங்கே துவாரகாதீஷ் ஆன ஸ்ரீகிருஷ்ணன் சந்நிதிக்கு நேர் எதிரே பெற்றெடுத்த தாயான தேவகிக்கு சந்நிதி அமைந்துள்ளது. ஒரு பக்கம் ருக்மிணி லக்ஷ்மி என்ற பெயரிலும் மற்றொரு பக்கம் சத்யபாமாவிற்கான சந்நிதியும் உள்ளது. ஜாம்பவதிக்கும் இங்கே தனி சந்நிதி உள்ளது. ஒவ்வொரு ஏகாதசியிலும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள கண்ணனின் உற்சவர் ஜலக்ரீடை செய்யச் செல்கின்றார்.

மேலும் இங்கே உள்ள மற்றொரு அதிசயம் என்னவெனில் இந்தக் கோயிலில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீஜி என அன்போடு அழைக்கப் படும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அனைத்து சேவைகளும் அவனின் முக்கிய இரு பட்டமஹிஷிகள் ஆன ருக்மிணியாலும், சத்யபாமையாலும் செய்யப் பட்டதாய் ஐதீகம். ஆகவே இன்றளவும் இந்தக் கோயிலில் கண்ணனுக்கு வழிபாடு நடத்தும் பட்டாசாரியார்/அர்ச்சகர் ஒரு பிரம்மசாரியாய் இருப்பதோடல்லாமல், ஒரு நாள் ருக்மிணி போலும், மற்றொரு நாள் சத்யபாமா போலும் தன்னை நினைத்துக் கொண்டு, ஒரு பெண் போலப் புடவை அணிந்து, தலையில் புடவைத் தலைப்பை வட இந்தியப் பெண்கள் போல் போட்டுக் கொண்டு, சிந்தூரம் வைத்துக் கொண்டு வழிபாடுகள் நடத்துகின்றார். பலராமருக்கும் தனியான சந்நிதி உண்டு. வல்லபாசாரியாருக்கும் தனியான மரியாதைகள் உண்டு. குஜராத்தின் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஸ்வாமிநாராயணனைப் பின்பற்றுபவர்களும், வல்லபாசாரியாரைப் பின்பற்றுபவர்களும் அதிகமாய் இருப்பதாய்க் கேள்விப் படுகின்றோம்.

இங்கே ராதைக்குத் தனி சந்நிதி உண்டு. ஊஞ்சல் உற்சவங்களில் கண்ணனோடு ஊஞ்சலாடும் உரிமை ராதைக்கு மட்டுமே. இன்னும் இதன் வரலாறு இவ்விதமாயும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பேட் துவாரகாவில் ஒரு கோட்டை இருந்ததாயும், ஆங்கிலேயர் தங்கள் படைகளை அங்கே நிறுவ முயன்றதாயும் அப்போது ஆட்சி புரிந்த மன்னன் அதை எதிர்த்ததாயும் கூறுகின்றனர். மன்னன் கோட்டையில் ஒளிந்திருக்க, ஆங்கிலேயர் சுரங்கம் தோண்டி பேட் துவாரகாவுக்குள் நுழைந்து கோயிலைத் தங்கள் வசப்படுத்தியதாகவும் பதினோரு நாட்கள் கோயில் வளாகத்தில் தங்கி இருந்து கிட்டத் தட்ட பதினான்கு கோடி மதிப்புள்ள ஆபரணங்கள், கிரீடங்கள் போன்றவற்றைக் களவாடிச் சென்றதாயும், மிகுந்த கஷ்டத்துடன் சிலவற்றை மீட்க முடிந்ததாயும் கூறுகின்றனர். அப்போது விக்ரஹங்கள் மட்டும் ராஜாவால் ஒளித்து வைக்கப் பட்டன. பின்னர் இந்தக் கோயில் புனர் நிர்மாணம் செய்யப் பட்டிருக்கின்றது.

துர்வாசர் சாபத்தின் காரணத்தால் பனிரண்டு மாதங்கள்/வருஷங்கள்?? ருக்மிணி தன்னந்தனியே வசிக்க நேர்ந்ததாயும், அப்போது ஒரு கூழாங்கல்லிலேயே கிருஷ்ணன் உருவத்தை வைத்துப் பூஜித்ததாயும் கூறுகின்றனர். இங்கே வல்லபாசாரியாருக்கும் தனியாய் சந்நிதி உண்டு. கோயில் பிரஹாரத்தில் ஒரு தூண் சுற்றுச் சுவரை ஒட்டினாற்போல் அமைந்துள்ளது. சுவருக்கும், தூணுக்கும் இடையில் உள்ள சிறு இடைவெளியில் புகுந்து வெளியே வந்தால் பாவங்கள் தீரும் என்று நம்பிக்கை. இப்போ உடல்நிலை இருக்கும் நிலையை உத்தேசித்து இரண்டு பேருமே அதை முயன்று பார்க்கவில்லை. மேலும் இங்கே ஒரு புத்தகம் இருக்கிறது. அந்தப் புத்தகத்தைப் பராமரிப்போரிடம் நம் குடும்பப் பெயர், முன்னோர்களில் சிலர் பெயர் சொன்னோமானால் நம் குடும்பத்தில் நமக்கு முன்னால் முன்னோர்களில் யார், யார் துவாரகைக்கு வந்து சென்றிருக்கின்றார்கள், எந்த வருடம் போன்ற விபரங்கள் கிடைக்கும். ஆனால் இதற்கு குடும்பச் சங்கிலி தெரியவேண்டும். இப்போ அதைக் காணோம்.


அகழ்வாராய்ச்சியின் சில படங்கள் கூகிளாரின் உதவியோடு.

அடுத்து துவாரகை கிருஷ்ணன் கடத்தப் பட்டார்!

No comments: