எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, May 06, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! லிங்க ஸ்வரூபம்!

பொதுவாக லிங்கங்களுக்கு மூன்று பகுதி உண்டு. அவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் பொதுவாய்க் குறித்தாலும், பஞ்ச பூதங்களில் முக்கியமான பூமி-பிரம்மா, நீர்-விஷ்ணு, அக்னி-சிவன், ஆகிய மூன்றையுமே சுட்டிக் காட்டுகிறது, என ஆன்றோர் கூற்று. இயற்கையிலும், இறை சக்தியே நிரம்பி உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவே இவ்வாறு சொல்கின்றார்கள், இந்த லிங்க வடிவிலே அடிப்பகுதியான பிரம்ம பாகம் பூமியிலே மறைந்து இருக்கும் வண்ணமும், ஆவுடை என்று சொல்லப் படும் நடுப்பகுதியான விஷ்ணு பாகம், அபிஷேகங்களை ஏற்கும் இடமாகவும், பாணமாகிய மேல் பகுதிதான் மேலோங்கி நின்று ஜோதி போலவும் காட்சி அளிக்கின்றது. இந்த லிங்கங்களுக்கு உருவமும் உண்டு, அருவலிங்கம் என வெறும் பாணம் மட்டுமே உள்ள லிங்கங்களும் உண்டு. முகலிங்கங்கள் உருவம், அருவம் இரண்டும் அமையப் பெற்றிருக்கும். அடிப்பகுதியான பிரம்ம பாகமும், ஆவுடையும் இருக்கும், நடுவில் உள்ள பாணப் பகுதியில் முகம் இருக்கும். இப்படிப் பட்ட லிங்கங்கள் நம் நாட்டை விட நேபாளத்திலேயே அதிகம் காணப் படுகின்றது.

தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவண்ணாமலை, போன்ற ஊர்களில் முகலிங்கங்களும், சுசீந்திரம் தாணுமாலயர் கோவிலில் கண், காது, மூக்கு வைத்து அலங்கரிக்கப் பட்ட முகலிங்கமும், காளஹஸ்தி கோயிலிலும் மேற்கூறியவாறு அலங்கரிக்கப் பட்ட லிங்கமும், ஊட்டியிலும் இவ்வாறான லிங்கங்களும் காணப் படுகின்றன. லிங்கங்கள் பலவகைப் பட்டாலும், வழிபாட்டுக்கு உரியவையில் சிறப்பானவை சுயம்புலிங்கங்களே ஆகும். இந்தச் சுயம்பு லிங்கங்கள் தானாக உண்டானதும், கரடுமுரடாகவும் இருக்கும், மற்ற ரேகைகள் எதுவும் இருக்காது என்றும் சொல்கின்றனர். இது தவிர, குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறும் இஷ்டலிங்கங்கள் உண்டு. இவை தனிப்பட்ட வழிபாடுகளிலேயே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. பாமர மக்களுக்கு அருளும் வண்ணம் ஏற்பட்டவையே தேவர்கள், முனிவர்கள், மற்றும் மனிதர்களால் ஸ்தாபிக்கப் பட்ட பரார்த்தலிங்கம். இவையே பெரும்பாலும் கோயில்களில் வழிபாட்டுக்கு என அமைந்துள்ளவை.

அம்பிகை தன் தவங்களின் போது, தன் வழிபாடலுக்கு என ஸ்தாபித்தவை "தேவிக லிங்கம்" என்று சொல்லப் படும். இதிலே தேவர்கள் பூஜித்த லிங்கம், "திவ்யலிங்கம்" அல்லது "தெய்வ லிங்கம்" எனச் சொல்லப் படுகின்றது. இந்திரன் பூஜித்தது இந்திரலிங்கம், வருணன் பூஜித்தது, வருணலிங்கம், வாயு பூஜித்தது வாயுலிங்கம் என வகைப் படுத்தப் படுகின்றது. மனிதனாக ராமன் வாழ்ந்தபோது ஸ்தாபிதம் செய்தது, பின்னர் பூஜித்ததும், இன்றளவும் அனைவரும் வழிபட்டு வருவதும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமியான "மானுட லிங்கம்" ஆகும். முனிவர்களால் பூஜிக்கப் பட்டது "ஆர்ஷிக லிங்கம்" எனவும், அசுரர்களால் பூஜிக்கப் பட்டது, "ராட்சச லிங்கம்" எனவும் சொல்லப் படுகின்றது.

முகலிங்கங்கள் பற்றிய விளக்கத்துக்கு முன்னர் லிங்கம் பற்றிய விளக்கம் சரியாக் கொடுக்கலைனு தோணியதாலே இந்த விளக்கம். முக லிங்கங்கள் பற்றிப் படங்கள் கிடைத்ததும் ஞாயிறு அன்றோ அல்லது திங்கள் அன்றோ பதிவு எழுதுகிறேன்.

2 comments: