எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 24, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

வாசந்திகா கண்ணீருடன் மேலே நடந்தாள். உயிரை அவள் விட இருந்த அந்தத் தருணத்தில் அரங்கன் கூவி அழைத்தது போல் குரல் அவள் காதில் கேட்க, கொடவர்களின் "ரங்கா! ரங்கா" என்னும் கூக்குரலாலோ என்னமோ அவள் மனம் மாறித் திரும்பினாள். அதனால் அரங்கனை இன்னும் நன்றாக ஒளித்தும் வைக்க முடிந்தது. நான் மட்டும் உயிரை விட்டிருந்தால் இத்தகைய பாக்கியம் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவள் எண்ணிக் கொண்டாள். இந்த வாழ்க்கையை இத்தனை சிரமங்களுக்கிடையேயும் நான் வாழ்ந்தாக வேண்டும் என்பது அரங்கன் கட்டளை போலும்! ஏனெனில் யாருக்காவது எப்போதாவது என் உதவி தேவைப்படும். என்னால் அவர்களுக்குப் பயன் ஏற்படும்! அரங்கா! இனி என் வாழ்வில் பிறர்க்கு உதவி செய்வதையே லக்ஷியமாகக் கொள்வேன்! என்று நினைத்துக் கொண்டே வாசந்திகா நடந்தாள்.  அவள் மனம் அத்தனை நாள் அனுபவித்த வேதனைகளையும் கசப்பான நிகழ்வுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முயன்றது.

**************

அங்கே! ஹொய்சள ராணியுடன் ராமேஸ்வரத் தீர்த்த யாத்திரைக்குச் சென்ற அனைவரும் அடுத்த இரு தினங்களில் ராமேஸ்வரம் சென்று தீர்த்தங்களில் நீராடினார்கள். பின்னர் திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்தார்கள். திரும்பும் வழியில் ஒரு நாள் மாலை ஓர் பெரிய ஊருணிக்கரையில் இறங்கி இரவு தங்க ஏற்பாடு செய்தார்கள். அடுத்தடுத்த அலைச்சல்களாலும் தூக்கமின்மையாலும் உடல்நலம் கெட்டுப் போய்க் காய்ச்சல் வந்து குலசேகரன் படுத்திருந்தான். குளிரினால் உடல் வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தது. பணியாட்கள் கஞ்சி கொண்டு வந்து கொடுத்திருந்தனர். அதைக் குடித்துவிட்டுத் தூங்கலாம் என நினைத்தால் அவனை எழுப்பினாள் ராணி கிருஷ்ணாயி. "வீரனே!" என்னும் அவள் குரல் கேட்டுக் கண் விழித்த குலசேகரன் எழுந்திருக்க முனைந்தான். கிருஷ்ணாயி வேண்டாம் எனத் தடுத்தாள். பின்னர் அவன் பக்கம் அமர்ந்து கொண்டு, கடுமையான வேலைகளில் ஈடுபட்டதால் உனக்கு உடல்நலம் கெட்டு விட்டது அல்லவா? இது என்னால் தானே? என்று கேட்டாள்.

குலசேகரன் மறுத்தான். அப்போது கிருஷ்ணாயி, குதிரையில் ஏறிப் பிரயாணம் செய்ததுக்கே உனக்குக் காய்ச்சல் வந்து படுத்துவிட்டாயே எனக் கிண்டலாகப் பேசினாள். குலசேகரனுக்கு உள்ளுக்குள் கோபம் வந்தாலும் வெளிக்காட்டாமல், "ராணி, தாங்கள் இந்த எளியவனை எவ்வளவு வேண்டுமானாலும் எள்ளி நகையாடுங்கள்! ஆனால் ஒன்று! நான் இந்த ஒரு யாத்திரையில் கலந்து கொண்டதால் மட்டும் உடல்நலம் கெட்டுப் போய்ப் படுக்க வில்லை. கடந்த மூன்று மாதங்களாக நான் அலைந்த அலைச்சலையும், சந்தித்த போர்களையும், சென்ற யாத்திரைகளையும் தாங்கள் அறிய மாட்டீர்கள். கொஞ்ச நேரம் ஓய்வு கூட எடுக்காமல் தொடர்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன். என் உடலும் மனித உடல் தானே மஹாராணி! அதனால் தான் உடல் நலம் கெட்டுவிட்டது!" என்று கோபமாகக் கூறிவிட்டுத் தன் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டு படுத்தான்.

ஆனால் கிருஷ்ணாயி போர்வையை விலக்கி அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அதீதமான ஜூரம் அடிப்பதைத் தெரிந்து கொண்டு அவனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு உடனடியாக மருத்துவரை அனுப்புவதாகக் கூறிவிட்டுச் சென்றாள். அதன் பிறகு வைத்தியர் வந்து குலசேகரனைச் சோதித்துப் பார்த்து மருந்து கொடுத்தார். மறுநாள் காய்ச்சல் கொஞ்சம் குறைந்தது. குறளன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டுத் தன் வேலையான முன் காவலுக்குச் சென்றான். காய்ச்சல் விட்டதால் உடல் வியர்த்துவிடப் போர்வையை விலக்கிவிட்டுக் கண்களை மூடித் தூங்க யத்தனிக்க திடீரெனக் குளிர்காற்று அவன் மேல் வீசக் கண்களைத் திறந்து பார்த்தான். கிருஷ்ணாயி ஓர் மயில் தோகையால் ஆனவிசிறியை வைத்துக் கொண்டு அவனுக்கு விசிறிக் கொண்டிருந்தாள்.

அவளைக்குலசேகரன் தடுக்க முயல அவளோ தடுக்காதே! என்று சொன்னாள். மேலும் வீரர்களுக்குப் பணிவிடை செய்வது அரசகுல மாண்பு என்றும் சொன்னாள். போரில் அடிபட்டு வீழ்ந்த பல வீரர்களுக்கு அவள் தந்தை பணிவிடை செய்திருப்பதாகவும் இறந்தவர்களுக்கு அவள் தாத்தா, தந்தை போன்றோர் சடங்குகள் செய்திருப்பதாகவும் சொன்னாள். தான் ஓர் தார்மிக அரச பரம்பரையில் உதித்தவள் என்றும் கூறினாள். இத்தகைய பணிவிடைகளினால் அவள் மகிழ்ச்சி அடைவதாகவும் சொன்னாள். குலசேகரனால் அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் அவளிடம் நேற்று என்னைக் கோழை என்று சொல்லிவிட்டு இன்று வீரன் என்று சொல்வதின் காரணம் என்ன என்று கேட்டான். அதற்குக் கிருஷ்ணாயி தான் அவனைச் சும்மாச் சீண்டி விளையாடியதாகச் சொன்னாள். இதெல்லாமா ஒரு வேடிக்கை என எண்ணினான் குலசேகரன்.

கிருஷ்ணாயி அவன் மனதைப் புரிந்து கொண்டவள் போல, அவனைச் சீண்டி விளையாடுவதில் அவள் மனம் மகிழ்ச்சி அடைவதாகச் சொன்னாள். கோபத்தில் குலசேகரன் முகம் சிவப்பதைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருப்பதாகவும் சொன்னாள். திருவண்ணாமலை வீதியில் கோபத்தில் அவன் துள்ளிக் குதித்ததைச் சொன்னாள்.  அவன் சண்டை இட்டதைப் பல்லக்கில் இருந்து எட்டிப் பார்த்ததும் தான் தான் என்று கூறினாள். அதன் பிறகே ஹொய்சள வீரர்களை அனுப்பிக் குலசேகரனைத் தடுத்ததாகவும் சொன்னாள். கோட்டைக் கிடங்கில் அவனைத் தள்ளியதும் அவள் தான் என்றாள். குலசேகரன் அவளிடம் அவள் ஏன் இத்தகைய கொடுமைகளை அவனுக்குச் செய்ய வேண்டும் என்றும் அதன் காரணம் என்ன என்றும் கேட்டான்.

கிருஷ்ணாயி சிரித்தாள். விளையாட்டுக்கு அவனைக் கிடங்கில் தள்ளி ஒரு மணி நேரம் கழிந்த பின்னர் விடுவிக்கலாம் என நினைத்த போதும் மன்னர் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் ஒரு வாரம் கடத்திவிட்டார் என்றாள். குலசேகரன் அதற்கு அவன் கிடங்கில் இருந்த சமயம் அவனுக்கு நல்லுபதேசங்கள் செய்த பெண்மணி யார் என்று கேட்டான்.  கிருஷ்ணாயி அதற்கு அவனிடம், "நீ தான் அவள் கண்களைப் பார்த்திருப்பாயே! அதிலிருந்து கண்டுபிடி!" என்றாள். குலசேகரன் தான் அதில் தேர்ச்சி பெற்றவன் இல்லை என்றும் எல்லாப் பெண்களின் கண்களும் தனக்கு ஒரே மாதிரி இருப்பதாகவும் சொன்னான். கிருஷ்ணாயி சிரித்தாள். ஆனாலும் உடனே அவனிடம், "வீரனே, நான் உன்னிடம் கொஞ்சம் நெருங்கிப் பேசவும் நீ என்னிடம் உரிமை கொண்டாடலாம் என நினைக்கிறாய் போலும்! எச்சரிக்கையோடு இரு!" என்று கூறிவிட்டு வெளியேறினாள். திகைத்தான் குலசேகரன். அப்போது கூடாரத்தின் திரையை வேறொரு பெண்ணின் வாளிப்பான கை மெல்ல மெல்ல விலக்கியது.  குலசேகரன் மேலும் திகைப்படைந்து அந்தப்பக்கம் பார்த்தான். 

1 comment:

நெல்லைத் தமிழன் said...

ஆனாலும் கீசா மேடம், தொடர்கதை மாதிரி படிக்க முடிவதில்லை. (தொடர்கதைனா வலிந்து 'தொடரும்'க்கு முன்னால ஒரு எதிர்பார்ப்போடு நிறுத்தியிருப்பாங்க). ஆனா இதை எழுதறதுக்கு நீங்க நிறைய படித்திருப்பீர்கள். பாராட்டுகள்.